100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை சாலையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு
- பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர்.
- தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில தேர்தல் துறையின், முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் மூலமாக 100 சதவீத மற்றும் நேர்மையான வாக்குப்பதிவுக்காக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஸ்கேட்டிங் மற்றும் தப்பாட்டம் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்து கொண்டே பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும் சென்றனர்.
வாக்காளர் உறுதி மொழியை ஏற்பதற்கான கையெழுத்து பிரசாரமும் நடந்தது. இதில் தேர்தல் துறை அதிகாரிகளை தொடர்ந்து பொதுமக்களும் தேர்தல் ஆணைய உறுதிமொழியை ஏற்று கையொப்பம் இட்டனர்.
மேலும் புதுச்சேரி மாநில விலங்கான அணில் வேட மணிந்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும், புதுச்சேரி மக்களும் செல்பி எடுத்து கொண்டதுடன், தேர்தல் துறையின் வாசகங்களை படித்து விழிப்புணர்வும் அடைந்தனர்.