ரவுடிகள் வீடுகளில் 2 மாநில போலீசார் திடீர் சோதனை: ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா என கண்காணிப்பு
- ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.
- எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கருவடிக் குப்பம் மற்றும் இடையஞ் சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் லாஸ்பேட்டை மற்றும் ஆரோவில் போலீ சார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை பகுதி, சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.
மேலும் வெடி பொருள், கத்தி போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என சோதனையிட்டனர். ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்களிடம் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்து கொள்ள எச்சரித்தனர்.
இதே போன்ற சோதனை புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிமருந்து பதுக்கி வைத்தல், குற்ற நடவடிக்கைக்கு திட்டமிடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த சோதனையை 3 மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.