சந்திர பிரியங்கா அறைக்கு 2 முறை "சீல்" வைப்பு: அதிகார போட்டியால் பரபரப்பு
- சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது
- சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகை அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா போக்குவரத்து அமைச்சர் பதவி வகித்து வந்த இவர், கடந்த 10-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் கடந்த 8-ந் தேதியே சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையிடம் கடிதம் அளித்தார். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது. முடிவாக கடந்த 21-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
அதையடுத்து, சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சட்டசபை செயலர் தயாளன் அறையை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினார்.
மேலும் சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த நோட்டீஸ் கிழித்து எறியப்பட்டு, முதலமைச்சரின் தனிச்செயலர் அமுதன் கையெழுத்திட்ட 'சீல் நோட்டீஸ்' அறை கதவில் ஒட்டப்பட்டது.
சட்டசபை வளாகம் சட்டசபை செயலர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அமைச்சர்களின் அலுவல்கள் மற்றும் அறை ஒதுக்கீடு உள்ளிட்ட அதிகாரங்கள் முதலமைச்சரின் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் சந்திர பிரியங்கா அறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் முதலமைச்சர் அலுவலகத்திற்கே உள்ளது என நிரூபிக்கும் வகையில், 2-வது முறையாக சீல் வைத்து, சந்திர பிரியங்கா அறை பூட்டப்பட்டது.