புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் நிர்மலா சீதாராமன் உள்பட 5 பேர் பரிசீலனை
- யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது.
- பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஏற்கனவே தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும்படி கோரியிருந்தார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. புதுவையை சேர்ந்த பா.ஜனதாவினர் அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக களம் இறக்கினால், எளிதில் வெற்றி பெறலாம் என கட்சித்தலைமையிடம் தெரிவித்து வந்தனர். ஆனால் உள்ளூர் அரசியலை விட்டு விலக அமைச்சர் நமச்சிவாயம் விரும்ப வில்லை.
இதனால் யாரை வேட்பாளராக்கினாலும், தான் வெற்றி பெற செய்வ தாக கட்சித் தலைமையிடம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறியுள்ளார்.
யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. இந்த 4 பிராந்தியங்களிலும் வாக்காளர்களிடம் அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றி எளிதாக இருக்கும் என பா.ஜனதா தலைமை கருதுகிறது. இதனால் பா.ஜனதா தலைமை அமைச்சர் நமச்சிவாயத்தை போட்டியிட செய்வதே சரி என கருதி வந்தது.
கவர்னர் தமிழிசையும் புதுச்சேரி தொகுதியில் களம் இறங்க ஆர்வமாக இருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தை மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா திறந்து வைத்தார். தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்தினார்.
மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமையில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடாத பட்சத்தில், தாங்கள் போட்டியிட தயாராக உள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர்.
இது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. புதுச்சேரியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஏற்கனவே தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும்படி கோரியிருந்தார்.
அவரும் இந்த கூட்டத்தில் தனக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்டுள்ளார். இதுதவிர முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் பெயர் புதிதாக வலம் வருகிறது. இவர் பா.ஜனதாவில் இணைந்த போது அவருக்கு கட்சி சில வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதனை நிறைவேற்றவில்லை என்பதால் அவருடைய் பெயரும் பட்டியலில் சென்றுள்ளது.
அதேநேரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்யும் வேட்பாளரைத்தான் தேர்தலில் போட்டியிட செய்வோம் என பா.ஜனதா மேலிட பார்வையாளர் அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர் நமச்சிவாயம், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் அடங்கிய வேட்பாளர் பட்டியலோடு முதல்-அமைச்சர் ரங்கசாமியை, பா.ஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சில யோசனை களை முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். அதற்கு முன்பாக புதுச்சேரி வேட்பாளரை இறுதி செய்ய கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
அனேகமாக அன்றைய தினம் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதில் புதுச்சேரி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.