புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கில் 7 பேர் விடுதலை
- சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
- ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
புதுச்சேரி:
2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.
இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.