விவசாயிகளிடம் தமிழக அரசு கொள்முதல் செய்ததால் புதுச்சேரியில் ஒரு ஜோடி கரும்பு ரூ.200-க்கு விற்பனை
- தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
- பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.
விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.
பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.
தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.
தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.
பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.