புதுச்சேரி அருகே சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை
- பயிற்சியின்போது விடுமுறை நாளில் தனது சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அன்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- நீண்ட நேரம் ஆகியும் அன்பு அலுவலகத்திற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர்.
சேதராப்பட்டு:
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த இரும்புளி குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 30). இவருக்கு திருமணமாகவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
பயிற்சியின்போது விடுமுறை நாளில் தனது சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அன்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறும் காலத்தில் இவரது மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. அவ்வப்போது இந்த விசாரணைக்கு அன்பு கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு புதுவை மேட்டுப் பாளையம் அருகே உள்ள தமிழகப் பகுதியான பூத்துறையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் அன்பு மானேஜராக பணிக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றும் நிறுவனம் அருகிலேயே அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அன்பு அலுவலகத்திற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அன்பு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பார்சல் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் உமா சங்கருக்கும், ஆரோவில் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து அன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.