புதுச்சேரி

புதுவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 200 பேர் கைது

Published On 2024-06-18 07:51 GMT   |   Update On 2024-06-18 07:51 GMT
  • மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும்.
  • தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இன்று மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அ.தி.மு.க.வினர் தங்கள் கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டிக் கொண்டும், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 முறை மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தோடு, அபராத கட்டணம், நிலை கட்டணம், மின்விலை ஈடுகட்டுவதற்கான கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் என்ற தலைப்புகளிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறது.

மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி எதிர்காலத்தில் தனியாருக்கு மின்துறையை தாரை வார்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கவர்னர் இப்பிரச்சினையில் தலையிட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமளா, மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News