கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும்.
- மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் சாவுக்கு காரணமான தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசிலை அருகில் இன்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
தமிழகம் முழுவதும் கள்ளசாராய விற்பனை அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது. ஆளும் திமுக அரசின் ஆதரவோடு விற்பனை செய்யப்படுவதால் பல இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு தமிழக தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும். ஆனால் அதை விடுத்து தமிழக முதலமைச்சர், இந்த சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், ஆந்திராவில் இருந்து தொழில்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்ட மெத்தனால் என்றும் சட்டமன்றத்தில் உண்மையை மூடி மறைக்கும் விதத்தில் ஆதராமற்ற குற்றச்சாட்டை கூறினார்.
இந்த சம்பவத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறுவது உண்மை என்றால் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். மனதை உலுக்கும் இந்த சட்டவிரோத சம்பவத்தை தமிழக சி.பி.சி.ஐ.டி.யே விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்..?
அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர்களும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கி தி.மு.க. அரசுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.