புதுச்சேரி
null

புதுச்சேரியில் உயர் ரக மதுபானங்களில் கலப்படம் செய்து விற்பனையா?- போலீசார் சோதனை

Published On 2024-07-23 05:19 GMT   |   Update On 2024-07-23 05:20 GMT
  • கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
  • மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையிலான பலவிதமான மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

புதுவையில் குறைந்த விலையில் விற்கப்படும் மதுபானங்களை பக்கத்து மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றும் அருந்தி வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இந்த விஷசாராய சாவு சம்பவத்துக்கு புதுவையில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபோல் புதுவையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி சென்று குடித்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்து போனார்கள். இதனால் புதுவை சாராயக் கடைகளில் புதுவை கலால் துறை அதிகாரிகள் அனைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில் புதுவையில் உள்ள மதுபான கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்களில் சிலர் கொள்ளை லாபம் ஈட்ட கலப்படம் செய்து விற்கப்படுவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.

அதன்பேரில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப் படி தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் கலால் துறை அதிகாரிகள் புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரும் உடன் சென்றனர்.

ஆய்வின்போது அனைத்து மது பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் பாட்டில்களின் சீல்கள் சரியாக உள்ளதா? என்றும் சோதனையிட்டனர்.

மேலும் உயர் ரக மது பாட்டில்களில் மாதிரி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த கலால் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அங்கு மது குடித்துக்கொண்டிருந்த மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

Tags:    

Similar News