தமிழகத்தில் தான் கள்ளச்சாராயம் உள்ளது- நமச்சிவாயம்
- கள்ளக்குறிச்சி மெத்தனால் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரித்து வருகிறது.
- முழு விசாரணைக்கு பின் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தெரிவிக்கப்படும்.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு காரணமான மெத்தனால், புதுச்சேரியில் இருந்து வரப்பட்டதாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இக்குற்றச்சாட்டை தொடர்ந்து, புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை தடுக்க கலால் சாவடிகள் அமைக்கப்படுமா? என உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மெத்தனால் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரித்து வருகிறது.
இதில் மாறுபட்ட கருத்துகளும் புது தகவல்களும் வந்து கொண்டுள்ளது. முழு விசாரணைக்கு பின் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தெரிவிக்கப்படும்.
இந்த வழக்கில் மாதேஷ் புதுச்சேரியில் பிடிபட்டுள்ளார். அவருக்கு பல இடங்களில் முகவரி சான்று உள்ளது. அவரை புதுச்சேரியில் பிடித்ததால் இங்கிருந்து வந்ததாக கூறுகின்றனர்.
தற்போது மரக்காணத்தில் ஒருவரை பிடித்துள்ளனர். கலால், போலீஸ் மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி அரசே மதுக்கடைகளை ஏலம் விட்டு முறைப்படி நடத்துவதால், இங்கு கள்ளச்சாராயத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் தான் கள்ளச்சாராயம் உள்ளது. புதுச்சேரியில் கலால் சாவடிகள் அமைக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.