புதுச்சேரி
நேரு வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.

புதுவையில் பந்த் போராட்டம்- அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது

Published On 2022-09-27 04:08 GMT   |   Update On 2022-09-27 04:08 GMT
  • புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர்.
  • சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின.

புதுச்சேரி:

இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

இதன்படி காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் நகர பகுதியில் முக்கிய சாலைகளான மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, காமராஜர் வீதி, படேல் சாலை, புஸ்சி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்தது.

புறநகர், கிராமப்புற பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில் தமிழகம், புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது.

புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர். சென்னை செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் இருந்தது. 2 அல்லது 3 பஸ்களில் பயணிகள் நிரம்பிய பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லை வரை கொண்டு சென்று போலீசார் அனுப்பினர்.

இருப்பினும் குறைவான அரசு பஸ்களே இயங்கியது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்களும், புதுவையிலிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் கல்லூரிகள் இயங்கியது. மாணவர்கள் கல்லூரி பஸ்களில் ஏறிச்சென்றனர்.

அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடக்கிறது. இதனால் பெற்றோர்கள் மாணவர்களை இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின. தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.

பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட், அரியாங்குப்பம், வில்லியனூர், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

பந்த் போராட்டத்தையொட்டி நகரெங்கும் சாலை சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களில் நகர பகுதி முழுவதும் போலீசார் வலம் வந்தனர்.

Tags:    

Similar News