தாயுடன் படுத்திருந்த 2 மாத ஆண் குழந்தையை கடத்திய பெங்களூரு தம்பதி கைது
- கண்காணிப்பு கேமராவில் குழந்தையை ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.
- விசாரணையில் குழந்தையை கடத்தி சென்றவர்கள் இருவரும் சோனியாவின் உறவினர்கள் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு லட்சயா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ஆதித்யா என்ற 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சோனியா புதுச்சேரி கடற்கரையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 27-ந்தேதி இரவில் வியாபாரத்தை முடித்த விட்டு மிஷன் வீதிக்கு நடந்து வந்துள்ளார்.
அங்கு ஒரு கடையின் முன்பு பிளாட்பாரத்தில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். பின்னர் அசதியில் அவர் குழந்தைகளுடன் பிளாட்பாரத்திலேயே தூங்கிவிட்டார்.
நள்ளிரவு திடீரென்று கண்விழித்து பார்த்தபோது குழந்தை ஆதித்யாவை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் யாரோ குழந்தையை கடத்தி சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த குழந்தையை ஒரு தம்பதி கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. அதனை வைத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் பெங்களூருவில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியர் புனிதா (31), பசவராஜ் (32) என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். கடந்த சில மாதத்துக்கு முன்பு புனிதா கர்ப்பமானார். இந்த நிலையில் திடீரென புனிதாவுக்கு கரு கலைந்தது.
இதனை கணவனிடம் கூறி புனிதா வருத்தப்பட்டார். மாமியார் உள்பட கணவன் வீட்டினர் ஏளனமாக பேசுவார்களே என்று பயந்துபோன புனிதா தனது கணவரிடம் வேறு எங்காவது குழந்தையை கடத்தி வந்து தனக்கு பிறந்ததாக கூறலாம் என யோசனை தெரிவித்தார்.
அதற்கு பசவராஜ் ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த 3 மாதத்துக்கு முன்பு பிரசவத்துக்காக தாய் வீட்டிற்கு செல்வதாக புனிதா தனது மாமியாரிடம் கூறிவிட்டு கணவருடன் புதுவை வந்தார்.
அவர்கள் இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து முகாமிட்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு சரியான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுவை கடற்கரைக்கு வந்தபோது அங்கு சோனியா கைக்குழந்தையுடன் பொம்மை விற்பதை பார்த்து உள்ளனர்.
குழந்தை அழகாக இருந்ததால் அதனை கடத்தி செல்ல முடிவு செய்தனர். இந்த திட்டத்திற்கு புனிதாவின் சகோதரரான புவனகிரியை சேர்ந்த ராஜ்கணேஷ் (30) உதவி செய்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பல நாட்களாக அவர்கள் சோனியா இரவு நேரத்தில் குழந்தையுடன் எங்கு செல்கிறார் என்பதை நோட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு மிஷன் வீதி கடை முன்பு பிளாட்பாரத்தில் குழந்தையுடன் சோனியா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழந்தையை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து குழந்தை கடத்தலுக்கு உதவிய புனிதாவின் சகோதரர் ராஜ்கணேசையும் போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட குழந்தையை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.