புதுச்சேரி

புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வராத பா.ஜனதா-காங். தலைவர்கள்: தொண்டர்கள் சோர்வு

Published On 2024-04-10 07:00 GMT   |   Update On 2024-04-10 07:00 GMT
  • காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
  • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா வேரூன்ற செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி நேரடியாக பிரசார களத்திற்கு வருகிறார்.

இதுவரை பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். நேற்று சென்னையில் ரோடு ஷோ சென்றார். இன்று வேலூர் மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அடுத்தபடியாக 13, 14, 15-ந் தேதிகளில் மீண்டும் தமிழகத்தில் விடுபட்ட பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதேநேரத்தில் 2 தேசிய கட்சிகளுக்கும் அகில இந்திய அளவிலான தலைவர்கள் யாரும் புதுவையில் பிரசாரத்துக்கு வரவில்லை. அண்டை மாநிலத்துக்கு பிரதமர் பலமுறை வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் இடத்துக்கு வராதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரிகள் என யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. தங்கள் கட்சி சார்பில் பிரசாரத்துக்கு யார், யார் வருவார்கள்? என தேர்தல் துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதியுடன் புதுவையில் பிரசாரம் நிறைவடைகிறது.

இதனால் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இதன்பிறகும் தேசிய தலைவர்கள் யாரும் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்ய வருவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Tags:    

Similar News