புதுச்சேரி

பாஜக-கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் எதிரொலி: ஆளில்லாத வீடு, கட்டிடங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை

Published On 2024-06-22 06:30 GMT   |   Update On 2024-06-22 06:31 GMT
  • வெடிகுண்டு வீசப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை.
  • வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே உள்ளது.

கேரளா மாநில அரசியலின் தாக்கம் மாகியில் எதிரொலிக்கும். மாகியில் கம்யூனிஸ்டுகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்பையொட்டி மாகி பிராந்திய பாஜகவினர் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

போலீசார் அனுமதிக்காத பகுதிக்கு ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு இருந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.

இதற்கு பதிலடியாக மாகி நகரம் குறிச்சி பகுதியில் வசிக்கும் பா.ஜனதா தொண்டர் சனூப் என்பவரின் வீட்டினுள் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் வீட்டின் ஜன்னல், டிவி போன்றவை வெடித்து சிதறின. வெடிகுண்டு வீசப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை.

இந்த நிலையில் மாகியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்படுவதை தடுக்க செருகல்லை, சாலக்கார பள்ளூர், தன்னாபிலகுல், கிழக்கு பள்ளூர், செம்பிரா, மேற்கு பள்ளூர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

கண்ணூர் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜியாசின் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாய் லக்சியுடன் சோதனை நடத்தினர்.

மாகி போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் நடந்த சோதனையில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அஜய்குமார், ரெனில் குமார், பிரதீப் ஆகியோர் ஆளில்லாத வீடுகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், புதர்கள் என சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகளில் சோதனை செய்தனர்.

வரும் நாட்களிலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News