சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம்- ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
- 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.