புதுச்சேரி
null

பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய பாஜக இறுதி முயற்சி

Published On 2024-07-26 05:24 GMT   |   Update On 2024-07-26 09:10 GMT
  • ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.
  • பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர், பாஜக அமைச்சர்களின் அணுகுமுறை, செயல்பாடுகள்தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே டெல்லியில் மத்திய மந்திரி மெக்வால், பாஜக தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை சமரசப்படுத்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்தார். அவருடைய சமாதான முயற்சியும் கைகூடவில்லை.

இதனிடையே புதுவை மாநில பா.ஜனதா செயற்குழுவில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.


அதோடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றனர். 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் அமித்ஷாவை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து கூட்டத்தொடர் 15 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் சமரசம் அடையாத நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிருப்தியை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய இறுதிகட்ட முயற்சியை பாஜக தலைமை எடுத்துள்ளது. இதற்காக நாளை (சனிக்கிழமை) பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வருகிறார். அவர் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

Tags:    

Similar News