அண்ணன் என்னடா... தங்கை என்னடா... அரசியல் களத்திலே... புதுச்சேரி தொகுதியை கைகழுவிய தமிழிசை
- ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.
- அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை.
புதுச்சேரி:
தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவராக திறம்பட செயலாற்றிய தால் தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.
தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை, 2021 பிப்ரவரியில் புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். வாரத்துக்கு 3 நாள் தெலுங்கானா, 3 நாள் புதுவை என பம்பரமாக சுழன்று தமிழிசை பணியாற்றி வந்தார்.
புதுச்சேரியின் மீது அதீத கவனம் செலுத்தி வந்த அவர் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம், வாட்டர் பெல் நேரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு, பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நேர சலுகை என பல்வேறு வகையிலும் அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, அரசு விழாக்களில் அண்ணன் என அழைத்தார். அமைச்சர்கள் தமிழிசையை அக்கா என்றே அழைத்து வந்தனர். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே தமிழிசையின் செயல்பாடுகள் அமைந்தது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை, ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள் என தெரிவித்து வந்தார். புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.
முதல்- அமைச்சர் ரங்கசாமியும் தமிழிசையின் எண்ணத்துக்கு தடை போடவில்லை.
பாராளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க புதுச்சேரி அரசியல் கட்சியினர் தமிழிசையை வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என முத்திரை குத்தினர். தமிழிசை புதுவையில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அணுகிய போது கிரீன் சிக்னல் அளிக்கவில்லை.
இருப்பினும் கட்சி தலைமை மீது மிகுந்த நம்பிக்கையோடு தமிழிசை காத்திருந்தார். புதுச்சேரியில் 3 ஆண்டாக செயல்படுத்தியுள்ள திட்டங்களை புத்தகமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.
ஆனால், புதுச்சேரியில் பா.ஜனதாவினர் கவர்னர் தமிழிசையை வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியை சேராதவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் இதனை பிரசாரமாக செய்யும் என பா.ஜனதாவினர் எதிர்த்தனர்.
மேலும், புதுச்சேரியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத் தவர் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த தமிழிசை, தமிழ்நாடு வேறு, புதுவை வேறு அல்ல, மக்களிடையே வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பி னும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் வேட்பாளராகக் கூடாது என உள்ளூர் பா.ஜனதாவினர் உறுதியாக இருந்தனர்.
அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை. இதனால் தமிழிசையை வேட்பாளராக்க கட்சித்தலைமை தயங்கியது.
இதனிடையே புதிய் சட்டமன்ற கட்டிடம் கட்ட கவர்னர் தமிழிசை முட்டுக்கட்டையிடுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.
இது ஆளுங்கட்சியின் ஒட்டு மொத்த எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் போட்டியிடும்படி தமிழிசையை பா.ஜனதா தலைமை கேட்டுக் கொண்டது. இதையேற்று புதுச்சேரியை கைகழுவி தமிழிசை, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.