புதுச்சேரி

கூட்டுறவு வங்கியில் போலி சான்றிதழ் கொடுத்து ரூ.35 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் மீது வழக்கு

Published On 2024-05-10 07:55 GMT   |   Update On 2024-05-10 07:55 GMT
  • வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதகடிப்பட்டு:

புதுச்சேரி திருபுவனையில் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 11 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 6,500 பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.

வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வங்கியில் உறுப்பினராக உள்ள கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி சார்பில் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றார்.

அதில் பெரும்பாலான நபர்கள் விவசாயிகளே இல்லாமல் கடன் பெற்றதும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகள் இட்டு போலியாக சான்றிதழ்கள் பெறப்பட்டு அதன் மூலம் கடன் பெற்றது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கலிதீர்த்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவரும் 50 நபர்கள் மீது போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து முருகன் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை மேற்கொண்டதில் போலியாக சான்றிதழ் கொடுத்து கடன் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி சான்றிதழ் கொடுத்து வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News