புதுச்சேரி

கைது செய்யப்பட்ட விளையாட்டு வீரர்.

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி: புதுச்சேரி சட்டசபைக்குள் சான்றிதழ்களை வீசிய விளையாட்டு வீரர் கைது

Published On 2023-08-09 04:19 GMT   |   Update On 2023-08-09 04:19 GMT
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
  • சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29).

பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவர் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சத்யராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சட்ட சபைக்கு வந்தார். சட்டசபை நுழை வாயிலில் நின்று கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை என்று கூச்சலிட்டார்.

அப்போது சட்டசபை காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை சட்டசபை நுழை வாயிலில் தூக்கி வீசினார். உடனே சபை காவலர்கள் அதனை எடுத்துக்கொடுத்து அங்கிருந்து செல்லும் படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டார்.

இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News