புதுச்சேரி

துறை ரீதியாக செய்த சாதனை பட்டியல் வெளியீடு - முதலமைச்சர் ரங்கசாமிக்கு சந்திர பிரியங்கா பதிலடி

Published On 2023-10-12 05:58 GMT   |   Update On 2023-10-12 06:00 GMT
  • சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
  • கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர், நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.

புதுச்சேரி:

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது முதலில் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்திருந்த சந்திர பிரியங்கா முதலமைச்சருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செயல்படாததால் அவரை நீக்க எனக்கு பரிந்துரைத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது துறைகளில் செய்த வளர்ச்சிப்பணிகள், சாதனைகள், மாற்றங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு துறைகளிலும், தான் செய்த வளர்ச்சி, மாற்றங்களை தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்து நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்கள் பார்வைக்கும், அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்களின் கவனத்திற்கும் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.

 கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர் தமிழிசை, நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.

புதுவை அரசு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்கப்படும் விருதும் கடந்த 2022-ம் ஆண்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட துறை என எனது தொழிலாளர் துறைக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.

இதுதவிர ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்டு, அதில் தான் செய்த மாற்றங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார்.

Tags:    

Similar News