null
புதுவை அமைச்சர்கள் இலாகா மாற்றம்- முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி முடிவு
- அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு.
- கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார்.
புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகன் நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீக்கப்பட்ட அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை பண்பாட்டுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தது.
மரபாக ஆதிதிராவிடர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.
தற்போது ஆதிதிராவிட சமூகத்தை சேராத திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனால் ஆதி திராவிடர் நலத்துறையை அவருக்கு ஒதுக்காமல், அதே சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய்.சரவணக்குமாருக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு. இருப்பினும் கூட்டணி அமைச்சரவை என்பதால் பா.ஜனதா தலைமையிடம் தெரிவித்து, இலாக்காக்களை மாற்றம் செய்ய வேண்டும். அப்படி மாற்றம் செய்யும் பட்சத்தில் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் உள்ள ஒரு துறையை புதிய அமைச்சருக்கு ஒதுக்க வேண்டும்.
இல்லாதபட்சத்தில் முதலமைச்சர் தன்வசமே ஆதிதிராவிடர் நலத்துறையை வைத்துக் கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, சுற்றுலாத்துறை என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமிநாராயணன் வசம் உள்ளது. சுற்றுலாவுடன் கலை பண்பாட்டுத்துறையும் இருந்தால் சுற்றுலா வளர்ச்சி மேம்பாடுகளை செய்வது எளிதாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.
இதனால் கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களின் ஒரு சில துறைகளை மாற்றி அமைக்கவும் முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த இலாக்கா மாற்றம் புதிய அமைச்சர் பதவியேற்ற நாளில்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.