தீபாவளி கொண்டாட்டம் போதை வாலிபர்களின் அட்டூழியத்தால் திணறிய புதுச்சேரி
- தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
- மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையையொட்டி அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு வாலிபர்கள் குவிந்தனர்.
வழக்கமாக வார இறுதிநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். அவர்கள் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ரெஸ்டோபார்களில் குத்தாட்டம் போடுவது, பார்களில் மது அருந்தி கொண்டாடுவர்.
இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அதே வேளையில் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்துவதற்காகவே பல இளைஞர்கள் புதுவைக்கு வந்திருந்தனர்.
இதனால் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போதை வாலிபர்களின் அட்டகாசத்தை பார்க்க முடிந்தது. புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே வெளியூர் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது.
மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள சாலையில் 2 இளைஞர்கள் உச்சகட்ட போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
சாலையில் சென்ற பொதுமக்களைஅவர்கள் அடித்து விரட்டினர். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்தனர்.
ஆனால் அவர்கள் போலீசாருடன் மல்லுக்கட்டினர். மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.
ஒருவரை வாகனத்தில் ஏற்றும்போது மற்றொருவர் இறங்குவதும், போலீசாரின் கைகளை கடிப்பதும் என அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதேபோல நேற்று மதியம் காமராஜர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திச் சென்றார்.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மீண்டும் அந்த போதை ஆசாமி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முயன்றார். அவர் செய்த அலப்பறையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அவர் வாகனத்தை எடுத்துச்சென்ற பிறகுதான் போக்குவரத்து சீரானது.
இதேபோல நகரின் பல பகுதிகளில் போதையில் ஆங்காங்கே வாலிபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். சாலையோரங்களில் மதுபோதையில் மயங்கி கிடந்தனர்.
மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுபார்களிலும் 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. மது அருந்தியவர்கள் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தந்த பகுதி போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.