தி.மு.க. அரசை விமர்சனம் செய்தால் கூட்டணி உடைந்து விடும் என்று பயம்
- நாராயணசாமி மீது ஓம்சக்தி சேகர் சாடல்
- இந்தியாவில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும் பொறுப்பேற்று நாராயணசாமி அரசியலில் இருந்தே விலகுவாரா?
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து ஏற்பட்ட மரணத்திற்கு புதுவை முதல்-அமைச்சர் பதவி விலக சொல்வது இந்த ஆண்டின் மிக பெரிய காமெடி என மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். எங்கே தமிழக தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் கூட்டணி உடைந்து அதற்கு நாம் காரணமாகி விடுவோமா என்ற பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் போகிற போக்கில் பேசி வருகிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரி, மாநில முதல்-அமைச்சர் என மிக பெரிய பொறுப்பான நிலைகளில் இருந்து விட்டு இப்போது நிலை தவறி பேசுவது ஒரு முன்னாள் முதல்- அமைச்சருக்கு அழகல்ல.
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்தவுடன் முதல் -அமைச்சர் ரங்கசாமி பதவி விலக நாராயணசாமி கேட்டார். அவர் மத்திய மந்திரி பதவியில் இருந்த போது தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வு பயம் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும் பொறுப்பேற்று நாராயணசாமி அரசியலில் இருந்தே விலகுவாரா?
தான் ஆட்சியில் இருந்த போது எப்போதும் கவர்னரிடம் போராட்டம் செய்தே காலத்தை கழித்து வாக்களித்த மக்களுக்கு எந்த நலனையும் செய்யாமல் இருந்து விட்டு இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்யும் நற்பணிகளை பொறுத்து கொள்ள முடியாத நாராயணசாமி தேவையின்றி பேசுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.