கடல் அரிப்பு- புதுவை அருகே மீனவ கிராமத்தில் 6 வீடுகள் இடிந்து தரைமட்டம்
- மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் உள்ளது. இதன் ஒரு பகுதி புதுவையைச் சேர்ந்ததாகவும் மற்றொரு பகுதி தமிழக பகுதியை சேர்ந்ததாகவும் உள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன. 3-க்கும் மேற்பட்ட படகுகளையும் அலைகள் இழுத்து சென்றது. 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அலைகளில் சிக்கி வேரோடு முறிந்து விழுந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று மதியம் பலத்த சூறை காற்றினால் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து அவ்வழியே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இன்று காலை மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.