நிர்வாண படத்தை அனுப்பி ரூ.3 லட்சம் பறிப்பு: சைபர் கிரைம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஏமாறும் பொதுமக்கள்
- அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.
- இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது40).
இவர் புதுவை அரசு பல்நோக்கு ஊழியர் ஆவார். இவர் தனது அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.
இதற்காக அவர், அந்த செயலியில் அவரின் செல்போன்களில் உள்ள அனைத்து தகவல்களை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்தார்.
அதையடுத்து அவருக்கு உடனே கடன் வழங்கப்பட்டது. கடன் பெற்ற ஒரு வாரத்திலேயே அந்த தொகையை ஆண்ட்ரூஸ் திரும்ப செலுத்திவிட்டார்.
ஆனால் அவரை ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆண்ட்ரூசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் உனது நிர்வரண படத்தை உறவினர்கள், நண்பர்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டினார். மேலும் ஆண்ட்ரூசின் நிர்வாண படத்தையும் அவரது செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூஸ் பல்வேறு தவணைகளாக ரூ.3லட்சம்வரை வங்கிகணக்கு மூலம் செலுத்தினார்.
ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.
இதையடுத்து ஆண்ட்ரூஸ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக இதேபோன்று நிர்வாண படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதனை பொருடப்படுத்தாமல் பலர் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர்.