போலி பத்திரம் தயாரித்து காலி மனையை பெண்ணிடம் விற்று ரூ.35 லட்சம் மோசடி- 4 பேருக்கு வலைவீச்சு
- வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.
- மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கற்பக வள்ளி (50). கணவரை இழந்தவர். ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.
கணவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் காப்பீடு தொகையாக வந்த பணத்திலும், சேமிப்பு பணத்திலும், மகன் வேலைக்கு சென்றதால் வந்த ஊதியத்தில் செலவு போக மீதமுள்ள பணத்தையும் சேமித்து வைத்திருந்தார்.
வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.
இதற்காக இவர் வில்லியனூர் என்.எஸ்.பி. போஸ் நகரில் ரூ.35 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கினார்.
அந்த இடத்தில் வீடு கட்ட பூஜை செய்ய கற்பகவள்ளி சென்றபோது அந்த இடம் வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமானது என்பதும் போலி பத்திரம் தயாரித்து தன்னை ஏமாற்றி வீட்டு மனையை விற்று விட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து கற்பகவள்ளி, வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மனையை உருளையன்பேட்டை சரவணன் மனைவி அனிதா, உழவர்கரையை சேர்ந்த வீட்டுமனை தரகர் கோபி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கற்பக வள்ளி விற்றது தெரியவந்தது. இதற்கு அவர்களுக்கு முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்த வேணிமூர்த்தி, மற்றும் மூலகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.