புதுவையில் ஜி20 மாநாடு- கடைகள், மதுக்கடைகள் திறக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது
- நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.
- விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் ஜி20 மாநாடு வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதன்பின் கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.
புதுவையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை சிறப்பாக நடத்த புதுவை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 30-ந் தேதி புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கருத்தரங்கு நடக்கிறது.
மாநாட்டையொட்டி ஜி 20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. பல கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதுவை நகர பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். புதுவை பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையிலும், சுற்றுலா தலமாக வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப்படும். மாநாடு வெற்றிகரமாக நடைபெற புதுவையின் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை என தவறான வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30-ந் தேதி இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில் விஞ்ஞானிகள் இணைந்து புதுவையில் நடைபெறும் கூட்டத்தை வழிநடத்துகின்றனர். 31-ந் தேதி ஆரோவில் சென்று பல இடங்களை பார்வையிடுகின்றனர்.
புதுவை மாநாட்டில் 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். டி.ஐ.ஜி. தலைமையில் 37 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1-ந் தேதி வரை அமலில் இருக்கும். பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். வழக்கம்போல மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் திறக்கலாம். மாநாட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.