புதுச்சேரி
null

ஆன்லைனில் புகைப்படம்-வீடியோக்களை இளம்பெண்கள் பகிர வேண்டாம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Published On 2023-08-22 06:16 GMT   |   Update On 2023-08-22 07:55 GMT
  • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
  • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News