புதுச்சேரி
null

போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க களமிறங்கிய கவர்னர் தமிழிசை- வாட்ஸ்-அப் எண் வெளியீடு

Published On 2024-03-10 04:17 GMT   |   Update On 2024-03-10 08:25 GMT
  • மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
  • கூடுதலான எண்ணிக்கையில் அதிகாரிகள், பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி முத்தியால் பேட்டையில் 9 வயது சிறுமி போதை ஆசாமிகளால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத்சவுகான், டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் உட்பட அரசு துறை செயலர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் , மற்றும் அனைத்து பிரிவு சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கவர்னர் மாளிகையில் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

புதுவையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மனநல ஆலோசனை வழங்க 24 மணி நேரம் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுக்கள் அமைத்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்பாடு களை தீவிர படுத்த வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் அதிகாரிகள், பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

போதைப்பொருள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். போதை பொருள் புதுவைக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காக்க வேண்டும். மாநில எல்லை களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.

போதை பொருள் மூளையை மழுங்கடித்து உடலை கெடுத்துவிடும். மாணவர் சமுதாயம் நினைத்தால் இந்த உலகத்தை புரட்டிப் போடலாம்.

நாம் அனைவரும் சேர்ந்துதான் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும். அரசு கடத்தலை, பதுக்கலை தடுக்கலாம். ஆனால் தனி மனித போதை பழக்கத்தை தடுக்க முடியாது. கவர்னர் மாளிகையில் 73395 55225 என்ற ஒரு வாட்ஸ்அப் எண் வெளியிடப்படுகிறது.

போதை தடுப்பு சம்பந்தமாக எந்த தகவலாக இருந்தாலும் இந்த எண்ணில் தெரியப்படுத்தலாம். இது கவர்னர் மாளிகை அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்கப்படும். சமுதாய உணர்வோடு இந்த எண் தரப்படுகிறது.

கவர்னர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மக்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த எண் அறிவிக்கப்படு கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News