முக்கிய சந்திப்பில் நாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர்- போலீசார் எச்சரித்து அகற்றினர்
- எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
- பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.
முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.
அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.
மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.
இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.
கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.
ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.