ஆரோவில்லில் கிராமத்து பெண்கள் தயாரித்த மூலிகை ஆடைகள்- பேஷன் ஷோவில் கலக்கல்
- கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
- விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.
இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.
ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.
விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.
பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.