null
எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்று பிரதமரை சந்திப்பேன்- ரங்கசாமி
- எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன.
- யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது.
புதுச்சேரி:
சுதந்திர தினத்தையொட்டி கம்பன் கலையரங்கில் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்பு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், வீரர்கள் நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என எண்ணினர். அவர்கள் எண்ணம்போல நம் நாடு இப்போது பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்கி வருகிறது. எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வகையில் புதுவையும் வளர்ச்சி பெற்று வருகிறது.
யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். பல ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்டு வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்று எப்போதும் மத்திய அரசை அணுகி கோரிக்கை வைத்து வருகிறோம்.
மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.
நேரடியாகவும் சந்தித்து மத்திய அரசை கேட்டுள்ளோம். எம்.எல்.ஏ.க்கள், தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று பிரதமரிடம் மாநில அந்தஸ்தை கேட்டு வலியுறுத்துவோம். நிச்சயமாக மாநில அந்தஸ்தை பெறுவோம். புதுவையில் ஆயிரத்து 348 தியாகிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தியாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தியாகிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ, கலெக்டர் வல்லவன், அரசு செயலர் பத்மாஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன், துறை அதிகாரிகள், விடுதலை போராட்ட தியாகிகள் பலர் கலந்துகொண்டனர்.