null
புதுச்சேரியில் 1,300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது
- நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சாய்ந்தன.
- விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.
அதன்படி புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் கனமழைகொட்டி வருகிறது. இந்த தொடர் மழையினால் புதுவையின் நெற் களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.
மேலும் வில்லியனூர், நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், பாகூர், ஏம்பலம், கோர்க்காடு பகுதியிலும் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
ஒரு சில வாரங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளன.
இதுபோல் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழையின் காரணமாக திருக்கனூர், கைக்கிலப்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சாய்ந்தன.
நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.