கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு- தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கும் ஏனாம்
- மழை வெள்ளத்தை தடுக்க இளைஞர்கள் மணல் மூட்டைகளை ஆங்காகே வைத்து தடுத்து வருகின்றனர்.
- போலீசார், தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கோதாவரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஏனாமின் 14 மீனவ கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓரிரு நாட்களில் வடியும் என கருதப்பட்ட வெள்ளம் தொடர்ந்து உயர்ந்து வருவதோடு 6-வது நாளாக நீடித்து வருகிறது. நேற்றும் கோதாவரி ஆற்றிலிருந்து வெளியெறும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.
இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள கோனா வெங்கடரத்தினம் நகர், அய்யன் நகர், பாலயோகி நகர், சுபத்ரா நகர், பரம்பெட் உள்ளிட் கிராமங்களை சூழ்ந்துள்ள நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மக்கள் குடிநீர், உணவின்றி தவித்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நகர பகுதியிலும் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள மண்டல அதிகாரி அலுவலகம், மருத்துவமனை, போலீஸ் நிலையம் என அனைத்தும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மழை வெள்ளத்தை தடுக்க இளைஞர்கள் மணல் மூட்டைகளை ஆங்காகே வைத்து தடுத்து வருகின்றனர். மேலும் போலீசார், தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
அய்யன்னா நகரில் ஒரு வீட்டில் நாய் 7 குட்டிகளை ஈன்று இருந்தது. அவற்றை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றினால் தான் நாங்கள் வருவோம் என குடும்பத்தினர் கூறினர்.
அவர்களது கோரிக்கைகளை ஏற்ற இளைஞர்கள் நாய் குட்டிகளை பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து படகில் ஏற்றினார்கள். இதனால் மன நிம்மதி அடைந்த குடும்பத்தினர் படகிற்கு வந்தனர். நள்ளிரவு வரை மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
ஏனாம் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திராவின் மும்மிடிவரம் காட்டுப்பகுதி உள்ளது. அங்கிருந்து வரும் வெள்ள நீரில் பாம்புகள் அடித்து வரப்படுகிறது. ஏராளமான பாம்புகள் வெள்ள நீரில் வருவதாக மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனிடையே வெள்ள மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் வல்லவன் ஏனாம் சென்றுள்ளார்.