புதுச்சேரி

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

ஜிப்மர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்- 4 எம்.எல்.ஏக்கள் கைது

Published On 2023-04-03 07:27 GMT   |   Update On 2023-04-03 07:27 GMT
  • ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
  • ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

புதுச்சேரி:

புதுவை ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத, மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.

நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். இதில் அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பலருக்கு ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

குறிப்பாக புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட எம்.எல்.ஏ.க்கள் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் கொண்டுவந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.

ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் சுகாதார உரிமையை பறிக்கக்கூடாது. ஏழை நோயாளிகளை வஞ்சிக்க கூடாது. புதுவை நோயாளிகளை புறக்கணிக்காதே என தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம் பரிதி, பழனி, பிரபாகரன், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ், சிறப்பு அழைப்பா ளர்கள் முகிலன், டாக்டர் நித்திஷ், தொகுதி செயலா ளர்கள், பல்வேறு அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பேட்டோரை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News