ஜிப்மர் மருத்துவ கல்லூரி சேர்க்கை: புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் சேர்ந்ததாக புகார்
- முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.
இவற்றில் 2023-24 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே இருவேறு மாநிலங்களில் இரட்டை குடியுரிமை அடிப்படையில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசையிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளது புதுவையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.