வெளிமாநில கொள்முதல் குறைப்பால் புதுச்சேரியில் மீண்டும் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
- பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
- பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.
மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.
தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.