புதுச்சேரி

பொதுசிவில் சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் அச்சப்பட வேண்டாம்- மத்திய மந்திரி தகவல்

Published On 2023-07-17 04:53 GMT   |   Update On 2023-07-17 04:53 GMT
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
  • ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.

உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.

புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.

எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News