புதுச்சேரி

அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்- நாராயணசாமிக்கு நமச்சிவாயம் கண்டனம்

Published On 2022-07-12 04:23 GMT   |   Update On 2022-07-12 04:23 GMT
  • எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்.
  • நாராயணசாமி வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து இதுபோல பேசி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் 2 மாதம் ஒரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன். போலீஸ் துறையில் நடந்த ஆய்வில் நகரில் பெருகிவரும் நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சட்ட-ஒழுங்கு, போதைப்பொருள் விற்பனை தடுப்பு, தொடர் குற்றவாளிகளை கண்காணித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கந்து வட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் கவர்னரை சந்தித்து அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும். துறை சார்ந்த கோப்புகளுக்கு அனுமதி, இலவச அரிசி வழங்குவது போன்ற திட்டங்களை ஆலோசனை செய்ய சென்றோம். எங்களுக்குள்ளோ, முதல்-அமைச்சருடனோ, கூட்டணியிலோ எந்த குழப்பமும் இல்லை.

எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். முதலில் அவர் கட்சியில் அவருக்குள்ள பிரச்சினையை பார்க்க வேண்டும். அந்த கட்சியினரே அவர் கட்சி நடவடிக்கையில் தலையிடக்கூடாது என புகார் தெரிவித்து வருகின்றனர்.

அவர் முதலில் அவர் கட்சியை பார்க்கட்டும், எங்கள் கூட்டணியில் மூக்கை நுழைக்க வேண்டும். இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து அவர் இதுபோல பேசி வருகிறார். அரசியலில் நானும் உள்ளேன் என தெரியப்படுத்த, எங்கள் அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.

இது அவரின் அனுபவத்துக்கும், வயதுக்கும் அழகல்ல. அவர் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

Tags:    

Similar News