புதுச்சேரி

பா.ஜனதா பிரமுகர் கொலை- புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

Published On 2023-04-04 05:56 GMT   |   Update On 2023-04-04 05:56 GMT
  • தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது.
  • புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கடந்த 26-ந் தேதி வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே டீ கடையில் நின்றிருந்தபோது ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டை வீசி தலையில் அரிவளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை தொடர்பாக ரவுடி நித்தியானந்தம் உட்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை வில்லியனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை கோர்க்காடு பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து போலீசார் மீட்டனர்.

சரணடைந்தவர்களிடம் விசாரணை முடிந்து இன்று மீண்டும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்து என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் விசாரணையில் இறங்கி உள்ளனர். பெங்களூருவில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் போலீஸ் காவலில் இருந்த நித்தியானந்தம் உட்பட 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்து வெடிகுண்டு துகள்களையும் கைப்பற்றினர். புதுவை போலீசாரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் பார்வையிட்டனர்.

இன்றும் அவர்கள் 2-வது நாளாக தொடர் விசாரணை நடத்துகின்றனர். தேசிய புலனாய்வு முகாமை தானாகவே முன்வந்து பா.ஜனதா பிரமுகர் கொலையை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏனெனில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சமீபகாலமாக தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகள், இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலைகள் அரங்கேறி வருகிறது.

இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது.

தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது. இந்த சதி செயல் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என்ற கேள்வி எழுந்ததின் அடிப்படையிலேயே அவர்களை தனித்தனியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதுவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News