கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: மாகியில் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்- புதுவை அரசு உத்தரவு
- புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
- ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.