புதுச்சேரி
கவர்னர் தலைமையில் திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி

திட்டக்குழு கூட்டம்- கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை

Published On 2022-07-06 08:36 GMT   |   Update On 2022-07-06 08:36 GMT
  • முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது.
  • கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதமும் 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்சர்மா, அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது. மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு அனுமதி அளித்தது.

தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடு காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதனால் புதுவை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி வருவாய் கிடைக்காது.

இதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது.

Tags:    

Similar News