புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு பரவல்- மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Published On 2024-07-15 07:35 GMT   |   Update On 2024-07-15 07:35 GMT
  • பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
  • ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11-ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.

இதில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராணி(16), செந்தாமரை(80), அவரின் மகள் காமாட்சி(45) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காத தால்தான் விஷவாயு உருவானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சீல் பி-டிராப் பொருத்தாததால்தான் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை துர்நாற்றம் நெடி அதிகரித்தது. இதனால் புதுநகர், மூகாம்பிகை நகர் பகுதி மக்கள் அச்சமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்று விசாரித்தனர்.

மின்தடையால் பணி நடைபெறவில்லை. எனவே துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சிவசங்கரன் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகளோடுஅங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரவு 9.30 மணியை தாண்டியும் மறியல் நடந்தது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் இரவு 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News