புதுச்சேரி

ஓட்டல், லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை- தமிழக ரவுடிகள் பதுங்கலா?

Published On 2024-07-19 05:25 GMT   |   Update On 2024-07-19 05:25 GMT
  • அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.
  • தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி:

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி ரவுடி திருவேங்கடம், புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை, ஆகியோரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயந்து தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பிற மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். புதுச்சேரியிலும் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா உத்தரவின் பேரில் புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.

இதே போல் அரியாங்குப்பத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.


மேலும் தங்கும் விடுதிக்கு வருபவர்கள் விவரங்களை நிச்சயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை கேட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஓட்டல் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் யாரும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனை செய்த பின்னரே புதுச்சேரிக்கு அனுதிக்கின்றனர்.

திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளத்திலும், கடலூர் சாலையில் முள்ளோடையிலும், விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டிலும் மற்றும் தமிழக எல்லையில் இருந்து வரும் உள்புற சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News