புதுச்சேரி தொகுதி தி.மு.க.வுக்கா? காங்கிரசுக்கா? மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்- மா.சுப்பிரமணியன்
- திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- 2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறிய தாவது-
பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட வண்ண கலவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து புதுவை அரசு தடை விதித்தது. அந்த செய்தியை பார்த்த பிறகு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
அப்போது, அதில் புற்று நோய் பாதிப்பை உண்டாக்கும் வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலோடு வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை.
திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதே அமைச்சர்தான் பாராளு மன்றத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர காலதாமதம் ஏன் என்ற கேள்விக்கு தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தர வில்லை என தெரிவித்தார்.
2019-ல் பிரதர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார்?. அல்லது வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட பிரதமர் ஒரு மாநில முதல்வர் எப்படி அழைத்து வருவார் என அன்றே நான் கேள்வி எழுப்பினேன்.
நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிச்சாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்ற உண்மையான காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்பட வில்லை என்றார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.
2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நில ஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் புதுவை எம்.பி. தொகுதியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.