புதுச்சேரி

பிஸ்கெட்டில் தலைமுடி: நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்- புதுச்சேரி நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2023-06-23 05:03 GMT   |   Update On 2023-06-23 05:03 GMT
  • பிஸ்கெட் சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
  • வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (48). பால் வியாபாரி.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனத்தின் 5 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார்.

அதைப் பிரித்து சாப்பிட்டபோது பிஸ்கெட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. அதை சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறப்பட்டது. பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

இதை தொடர்ந்து வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பின் நகல் வழக்கு தொடுத்த வடமலைக்கு நேற்று வக்கீல் சரவணன் மூலம் அளிக்கப்பட்டது. அதன்படி பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தநிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News