புதுச்சேரியில் அரசு பல்கலைக்கூட மாணவர்கள் திடீர் மோதல்- போலீசார் குவிப்பு
- மோதலில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
- தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பாரதியார் பல்கலைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த பல்கலைக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கூடத்தில் துறை வாரியாக முதல்வர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொறுப்பு முதல்வராக இருந்த போஸ் மாற்றப்பட்டார்.
அதன்பிறகும் பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார். முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர்களிடையே நடந்த மோதலால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.