ஒரே நாளில் கையெழுத்திட்டு ஜல்லிக்கட்டை மீட்டது பிரதமர் மோடிதான்- கவர்னர் தமிழிசை
- கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
- தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.
தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.
விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.