தமிழக அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த புதுச்சேரி பெண் அமைச்சர்
- அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனின் முயற்சியால் காரைக்கால்-கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பஸ் சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பஸ் சேவை கருக்குங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. புதிய பஸ் சேவையை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.
புதுவை அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்களை இயக்க முடியாத சூழலில் தமிழக அரசு பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.